சென்னை: மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் அத்தியாவசியச் சேவைகள் தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகப் பொதுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு, அரசாங்க நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து, மின் விநியோகம் போன்ற அத்தியாவசியச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
ஆனால் பேருந்து, ரயில் சேவைகள் பாதிக்கப்படமாட்டா என்றும் மின்விநியோகம் தடைபடாது என்றும் அதற்குத் தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறக்கூடும் என்பதால் இரண்டு நாளும் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

