துபாய்: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சி யாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்குச் சென்றார். ஞாயிறன்று 'நம்மில் ஒருவர் - நமக்கான முதல்வர்' என்ற தலைப்பில் துபாய் தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
துபாய் சென்றதுமுதல் தொழில்துறை சார்ந்த பன்னாட்டு நிகழ்வுகள் பலவற்றில் கோட்- சூட் அணிந்து பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் வழக்கம்போல வேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் இலங்கை எம்.பி. ரஃபூக், மலேசிய அமைச்சர் சரவணன், ஐக்கிய அரபு சிற்றரசுகளின் திமுக நிர்வாகிகள் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றனர்.
அவர்களைக் கண்ட ஸ்டாலின், "உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா'' என்று கேட்டு, தனது கைபேசி மூலமாக செல்ஃபி எடுத்துக்கொண்டார். அப்போது, அங்கு திரண்டிருந்த தமிழர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதற்கு அவர், அயலக மண்ணில் இருக்கிறேனா தமிழ்நாட்டில் இருக்கிறேனா என்று தெரியாத அளவிற்கு அன்பில் மிதப்பதாகக் குறிப்பிட்டார்.
பின்னர் உரையாற்றிய ஸ்டா லின்,"மரம் எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும் அது வேரை விட்டு விடுவதில்லை, அதேபோல் தமிழையும் தமிழகத்தையும் விட்டுவிடாதீர்கள். நீங்கள் வாழும் நாட்டை முன்னேற்றுங்கள். அதே நேரம், நாம் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடாமல் வாழுங்கள். தமிழை வளர்ப்போம். தமிழரை வளர்ப்போம். கடல் கடந்து வாழ்ந்து வரும் நீங்கள் எல்லாரும் மொழியால் தமிழர்கள், இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக வாழ வேண்டும். சாதியோ, மதமோ உங்களை பிளவுபடுத்தக் கூடாது. தமிழர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் திமுகவின் லட்சியம்," என்று ஸ்டாலின் கூறினார்.

