புதுக்கோட்டை: பெற்ற தாயை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற ஆடவருக்கு நேற்று புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் மருதந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 26. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தமது தாய் லீலாவதியை (வயது 55) மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சந்தோஷ் குமாரை கைது செய்த காவல்துறையினர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குடிக்க பணம் கொடுக்க மறுத்த காரணத்துக்காக, பெற்ற தாயைக் கொன்ற மகன் சந்தோஷ்குமாருக்கு 40 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார்.
மேலும், தமது தவற்றை உணர் வதற்காக மூன்று மாதம் அவரை தனிமைச் சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

