சென்னை: தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையைக் கண்டித்து வள்ளுவர்கோட்டம் அருகே தமிழ்நாடு மாநில பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.16,500 கோடி என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். ஆனால், இறுதி நிலுவைத் தொகையையும் மத்திய அரசு வழங்கிவிட்டது." என்றார்.
அண்ணாமலையின் கருத்துக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் கூறியுள்ளார். "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு பட்ஜெட் ஆவணங்களை முழுமையாக படிக்க வேண்டும். தகுதியற்ற நபர்கள் பொது இடங்களில் தெரிவிக்கும் தவறான தகவல்களுக்குப் பதிலளிப்பது என் வேலை இல்லை.
"சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஏதேனும் தவறு இருப்பதாகக் கருதினால் அது அண்ணாமலையின் அறியாமை. நான் பொய் சொல்லி இருப்பதாக நினைத்தால் அவர் நீதிமன்றத்தை நாடலாம்," என்றார் அவர்.