சென்னை கோயம்பேடு சந்தையில் ஐந்து டன் காய்கறிகள் வீணாகின

சென்னை கோயம்பேடு சந்தையில் ஐந்து டன் காய்கறிகள் வீணாகின

1 mins read
aa566a2d-015c-4f2d-a5a0-de734e1db815
-

சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக ஏறக்குறைய ஐந்து டன் காய்கறிகள் அழுகி வீணாகின.

தேவையைவிட வரத்து அதிகாமாக இருந்ததும் குளிர்சாதன சேமிப்பு வசதிகள் இல்லாததும் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

குளிர்சாதன சேமிப்பு வசதிகளை அமைப்பதன் தொடர்பில் கோயம்பேடு சந்தைக் குழு ஆராய்ந்து வருகிறது.

"ஒவ்வொரு நாளும் காய்கறிகள் வீசப்படுவது பற்றி எங்களுக்குத் தெரியும். காய்கறிகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் அரசு சார்பற்ற அமைப்புகளுடனும் ஆதரவற்றோர் இல்லங்களுடனும் நாங்கள் ஏற்கெனவே பேசினோம்," என்று கோயம்பேடு சந்தைக் குழுத் தலைமை மேலாண்மை அதிகாரி எஸ்.சாந்தி கூறினார்.

கோயம்பேடு சந்தையில் ஏறத்தாழ 1,985 மொத்த விற்பனையாளர்கள் காய்கறி விற்கின்றனர். அங்கு 3,941 கடைகள் உள்ளன.

தேவையைவிட வரத்து அதிகரித்ததால் கடந்த வாரம் அதிக காய்கறிகள் விரயமாகியதாக கோயம்பேடு சந்தை உரிமம்பெற்ற வணிகர் சங்கத் தலைவர் எஸ்.சந்திரன் கூறினார்.

"ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 கூடுதல் லாரிகள் சந்தைக்கு வருகின்றன. அனைத்து காய்கறிகளையும் எங்களால் விற்க இயலவில்லை," என்றார் அவர்.