திருப்பூர்: விவசாயத்தைக் காக்க வலியுறுத்தி திருப்பூரைச் சேர்ந்த 31 வயதான அசோக்கும் அவரது மனைவி பிரபாவும் (29 வயது) கார் பயணம் மேற்கொண்டுள்ளனர் (படம்). இந்த இளம் தம்பதியரின் நான்கு வயது மகனும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த அசோக்குக்கு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் அதிகம். இதையடுத்து குமரியில் தொடங்கி காஷ்மீர் வரை பயணம் மேற்கொள்ளலாம் என தன் மனைவியை கலந்தாலோசித்து முடிவெடுத்தார்.
அதன்படி, தனது பணியில் இருந்து விலகினார் அசோக். அதன்மூலம் வந்த பணத்தைக் கொண்டு கார் வாங்கிய அவர், அதிலேயே படுத்து உறங்கி, சமையல் செய்வதற்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களைச் செய்துள்ளார்.
"நூறு நாள்களில் பயணத்தை முடிக்கும் திட்டத்துடன் ஜனவரி மாதம் மூவரும் திருப்பூரில் இருந்து பயணம் தொடங்கினோம். 28 மாநிலங்களில் உள்ள முக்கிய இடங்களைப் பார்த்தோம். வழி முழுவதும் விவசாயம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்," என்று அசோக் தெரிவித்துள்ளார்.

