'கஞ்சா விற்போரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்'
சென்னை: தமிழகத்தில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், மார்ச் 28 முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை, 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற பெயரில் கஞ்சா விற்போர் மீதான கடும் நடவடிக்கைகள் நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் இவற்றை பறிமுதல் செய்கின்றனர். பலர் கைதாகின்றனர்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் பெரிய அளவில் நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் கஞ்சா விற்பனைச் சங்கிலியை உடைக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
இதையடுத்து 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. டிஜிபி சைலேந்திரபாபு இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறாரா்.
"கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இப்போது அந்நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
"பள்ளி, கல்லுாரிகள் அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும். கடத்தல், பதுக்கல், விற்பனை சங்கிலித் தொடரை உடைக்க வேண்டும்," என டிஜிபி சைலேந்திரபாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் ரயில்வே காவல்துறையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்ற வேண்டும் என்றும் டிஜிபியின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் விற்பவர்கள், பின்னணியில் இருப்பவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பை காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவுத் தலைமைக் காவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தப் பணிகளை மாநிலச் சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி கண்காணித்து, கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை, ஆவடி, தாம்பரம் பகுதிகளுக்கான காவல் ஆணையர்கள், போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் நேரடியாக கவனம் செலுத்தி அறிக்கை தர வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு மேலும் தெரிவித்துள்ளார்.

