ஜெயக்குமார்: சசிகலா சுதந்திரப் பறவை
சென்னை: இந்தியா ஒரு சுதந்திர நாடு என்பதால் சசிகலாவும் ஒரு சுதந்திர பறவையாக எங்கு வேண்டுமானாலும் சுற்றி வரலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சசிகலா மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், சசிகலாவின் சுற்றுப்பயணத்தால் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றார். அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்பதே திமுகவின் ஒரே பணியாக இருக்கிறது என்றும் அவர் சாடினார்.
தமிழகத்தில் ஆக அதிகமாகப் பதிவாகிய ஒருநாள் மின் தேவை
சென்னை: கடந்த திங்கட்கிழமை தமிழகத்தின் மின் தேவை 17,106 மெகாவாட்டாக இருந்தது என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அதை பூர்த்தி செய்துள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக வரலாற்றில் இதுவே ஒருநாளின் அதிகபட்ச மின் தேவையாக பதிவாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அரசு மேற்கொண்ட தீவிர முன்னெடுப்புகள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிக்குள் புகுந்த பாம்பு
திருவள்ளூர்: பாடிய நல்லூரில் அரசு நடுநிலைப் பள்ளிக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் அந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் காலை மாணவர்களும் ஆசிரியர்களும் வழக்கம்போல் வகுப்பறைகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வகுப்பறையில் பாம்பு ஒன்று படுத்திருப்பதைக் கண்டு மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட, வீரர்கள் விரைந்து வந்து ஆறடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்துச் சென்றனர். அது பின்னர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளி வாகனங்களில் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பத் தடை
சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளி வாகனங்களில் இனி திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பக்கூடாது எனத் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும்போது பேருந்து உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றின் வழி தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், தனியார் பள்ளி மாணவர் ஒருவர், பள்ளி வாகனம் மோதியதில் உயிரிழந்தார். அந்தச் சம்பவத்தையடுத்தே தமிழக அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
முடிந்தால் கைது செய்து பாருங்கள்: அண்ணாமலை திடீர் சவால்
சென்னை: தமக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இல்லை என்றும் சொந்த ஊரில் சில ஆடு, மாடுகள் மட்டுமே உள்ளன என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு முடிந்தால் தம்மைக் கைது செய்யட்டும் என சவால் விடுத்தார். "நான் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில்தான் இருப்பேன். முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள். தொட்டாம்பட்டியில் இருந்து வந்த என்னை தொட்டுப் பார்க்கட்டும்," என்றார் அண்ணாமலை.
5,000 பாம்புகளைப் பிடிக்கவும் விஷத்தை விற்கவும் இருளர்களுக்கு அனுமதி
சென்னை: இருளர் இன மக்கள் இனி தடையின்றி பாம்புகளைப் பிடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அம்மக்களின் கோரிக்கையை ஏற்று, பாம்பு பிடிப்பதற்கான உரிமத்தை புதுப்பிப்பதாகவும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பாம்புகள் பிடிக்கும் தொழிலில் இருளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாம்புகளைப் பிடிக்கவும் அவற்றின் மூலம் சேகரிக்கும் விஷத்தை விற்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆண்டுதோறும் இதற்கான உரிமத்தை அரசு புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில், 2021-2022ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்தாயிரம் பாம்புகளைப் பிடிக்கவும் விஷத்தை விற்கவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஷ முறிவு மருந்து தயாரிக்க நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு ஆகிய இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கண்ணாடி விரியன் பாம்பு விஷம் ஒரு கிராம் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்படுவதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

