சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் நேற்று முன்தினம் தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தின் போது தமிழகத்தில் 37,000 பேர் கைதாகினர்.
மாநிலம் முழுவதும் 323 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதாகவும் கைதானவர்கள் ஆங்காங்கே திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.
சென்னையில் ஆறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அண்ணா சாலை, கிண்டி உள்பட ஐந்து இடங்களில் சாலைமறியல் போராட்டங்கள் நடைபெற்றன என்றும் 200 பெண்கள் உள்பட 1,300 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையே, தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம் நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது. எனினும் 90% அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி 28ஆம் தேதி போதிய அளவு பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளானதாகவும் 29ஆம் தேதி (நேற்று) 98% பேருந்துகள் இயக்கப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

