சென்னை: ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வேல், தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட காணொளி சமூக ஊடகங்களில் கலக்கி வருகிறது.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வினி ராமனை அவர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் கொேரானா காரணமாக அவர்களுடைய திருமணம் தள்ளிப் போனது.
இந்த நிலையில் இம்மாதம் 18ஆம் தேதி மெல்பர்ன் நகரில் கிறிஸ்துவ முறைப்படி அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
இருந்தாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருவருக்கும் தமிழர் கலாசாரப்படி திரு மணம் நடைபெற்றது.
தமிழக பாரம்பரியத்தின்படி வினி ராமன் காஞ்சிபுரம் பட்டுச் சேலை அணிந்து, முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு வந்தார்.
இதேபோல மணமகன் கிளென் மேக்ஸ்வெல் பைஜாமா 'ஷெர்வானி' அணிந்து கழுத்தில் மாலையுடன் தமிழக மாப்பிள்ளையைப் போல காட்சியளித்தார்.
முன்னதாக கிளென் மேக்ஸ்வெல், இன்ஸ்டகிராமில் தனது காதல் கதையைப் பகிர்ந்துகொண்டார். இருவரும் கைகோத்து காணப்பட்டனர்.
வினி ராமனின் முன் நெற்றியில் முத்தமிடும் படத்தையும் அவர் பதிவேற்றியிருந்தார்.
திருமணத்தில் கிளென் மேக்ஸ் வெல், ஆரஞ்சு நிற பைஜாமாவையும் வினி ராமன் ஆரஞ்சு பார்டருடன்கூடிய பச்சை நிற பட்டுச் சேலையும் அணிந்திருந்தனர். இருவரும் இசைக்கு ஏற்ப நடனமாடி பலரும் கைதட்ட மாலையை மாற்றிக் கொண்டனர்.
வினி ராமன், சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர். இவர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 'பார்மஸி' படித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழில் அச்சிடப்பட்டிருந்த இவர்களது திருமண அழைப்பிதழும் இணையத்தில் பரவி வருகிறது.
இந்தத் திருமண ஜோடிக்கு ஏராளமானோர் சமூக ஊடகங்கள் வழியாக வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
சென்ற திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல்லின் தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த கிளென் மேக்ஸ்வெல் விளையாடவில்லை. ஏப்ரல் 5ஆம் தேதிக்குப் பிறகுதான் அவர் போட்டிகளில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு, ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல்லை ஐபிஎல்லில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 11 கோடிக்கு ரூபாய்க்கு தக்கவைத்துக் கொண்டது.
தமிழக மாப்பிள்ளையாகியுள்ள கிளென் மேக்ஸ்வெல்லுக்கு ஐபிஎல்லின் சென்னை சூப்பர் கிங்சும் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.