சென்னை: முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான டி.ஜெயக்குமார் தமிழகத்தில் தன் மீது பொய் வழக்குப் போடப்படுவதாகக் கூறி அதிபர் ராம்நாத் கோவிந்த், துணை அதிபர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தலைவர், மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"தமிழ்நாட்டில் சென்னையிலும் மற்ற நகர, பேரூராட்சி பகுதிகளிலும் நகர உள்ளாட்சித்தேர்தல் நடை பெற்றது. ராயபுரத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களை ஏந்தியபடி குண்டர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டனர். வாக்குச்சாவடிகளை கைப்பற்றினார்கள். கள்ள வாக்குப் போட்டார்கள். அவர்களில் ஒருவர் ஆர்.நரேஷ். இவர் தி.மு.க. தொண்டர் ஆவார். அவர் சமூக விரோதி. ஏற்கெனவே நடைபெற்ற பல குற்றங் களில் அவருக்குத் தொடர்பு உண்டு. அவருக்கு எதிராக பல வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. காவல்துறையினரைக்கூட அவர் தாக்கியுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்களையும் தாக்கி உள்ளார். குற்ற நடவடிக்கையின்போது அவர் பிடிக்கப்பட்டார். அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தோம். இதற் கிடையே ராயபுரம் காவல் நிலையத்தில் எனக்கு எதிராகவும் எங்கள் கட்சித்தொண்டர்களுக்கு எதிராகவும் ஆர்.நரேஷ் பொய்ப் புகார் கொடுத்தார்.
இந்த பொய்ப் புகார்களின் அடிப் படையில் காவல்துறை துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையில் காவல் துறையினர் எனது வீட்டிற்குள் புகுந்தனர். நான் அப்போது எனது மனைவி மற்றும் பேரக் குழந்தைகளுடன் இரவு உணவு சாப்பிட தயாராகிக் கொண்டு இருந்தேன். நீங்கள் கைது செய்யப்பட்டு உள்ளீர்கள் என்று அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். உடனடியாக வேனில் ஏறுமாறு என்னை கட்டாயப்படுத்தினார்கள். எதற்காக கைது செய்யப்பட்டுள்ளேன் என்ற விவரத்தை என்னிடம் அவர்கள் தெரிவிக்கவில்லை. உடையை மாற்றிக்கொள்ளவும் இரவில் உட்கொள்ள வேண்டிய மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும் காவல்துறை யினர் அனுமதிக்கவில்லை.
"வேனில் என்னை ஏற்றினார்கள். ஆனால் என்னை காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லவில்லை. நள்ளிரவு எழும்பூரில் உள்ள மெட்ரோபாலிட்டன் நீதிமன்ற வளாகத்திற்கு என்னை கொண்டு சென்றனர். அங்கு ஜார்ஜ்டவுன் நீதிமன்ற மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் முன்பு என்னை முன்னிலைப்படுத்தினர்.
அப்போது, திமுக அரசின் கட்டளைப்படி காவல்துறை என்னிடம் காட்டுமிராண்டித்தனமாக நடக்கிறது என்று மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தேன். இது மனித உரிமை மீறல் என்பதையும் உச்ச நீதிமன்ற வழிமுறைகளுக்கு புறம்பானது என்பதையும் எடுத்துரைத்தேன்.
மாஜிஸ்திரேட், எனக்குச் சிறையில் முதல் வகுப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தர விட்டிருந்தார். ஆனால் என்னை பூந்தமல்லி கிளைச்சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அரசியல் கைதிகளுக்கான முதல் வகுப்பு வசதியில்லை. உணவும் தரவில்லை. உடல்நலப் பிரச்சினைகளை தணிப்பதற்கான மருந்து மாத்திரைகளும் தரப்படவில்லை. அசுத்தமான அறையில் கொசுக் கடிகளுக்கிடையே நான் அவதிப்பட்டேன். எனவே அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து வரும் திமுக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துணை ஆணையர் சுந்தரவதனம், ஆய்வாளர் லட்சுமணன், பூபாலன், சங்கர பாண்டியன், ஆய்வாளர் பணியாற்றி சம்பவத்திற்குப் பிறகு காவல் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்ற ரவி ஆகியோர் மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அந்தக் கடிதத்தில் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

