ஸ்டாலின் ெடல்லி பயணம்
சென்னை: துபாய், அபிதாபி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லிக்குப் புறப்பட்டுள்ளார். டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை அவர் சந்திக்கவிருக்கிறார்.
"தமிழ்நாட்டில் கழக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட நம்முடைய மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது," என்று டெல்லி பயணம் பற்றி முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமேசானின்
18 மாடி கட்டடம்
சென்னை: அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் உலகின் முன்னணி இணையத் தள விற்பனை நிறுவனமான அமேசானுக்கு ஏற்கெனவே சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இரண்டு அலுவலகங்களும் கோவை சரவணம்பட்டியில் ஒரு அலுவலகமும் உள்ளன.
இந்த நிலையில் சென்னை பெருங்குடி பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள உலக வர்த்தக மைய வளாகத்தில் 6,000 பேர் பணியாற்றும் வகையில் 8.3 லட்சம் சதுர அடி பரப்பளவில் 18 மாடிகளைக் கொண்ட புதிய அலுவலகத்தை அமேசான் அமைத்துள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் செவ்வாய் அன்று திறந்து வைத்தார்.
இது குறித்து பேசிய அமேசான் நிறுவனத்தின் துணைத் தலைவர் சேட்டன் கிருஷ்ணசாமி, "கடந்த 2005ல் 50 பேருடன் சென்னையில் தொடங்கப்பட்ட அமேசான் நிறுவனம் தற்போது 21 லட்சம் சதுர அடி பரப்பளவில் 14,000 பேர் பணியாற்றும் நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது," என்றார்.
"இந்தப் புதிய அலுவலகம் இந்தியாவின் 2வது ஆகப்பெரிய அமேசான் அலுவலகம் ஆகும். அமேசான் நிறுவனம் மூலம் 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்," என்றும் அவர் கூறினார்.
முன்னாள் நீதிபதி
வீட்டில் கொள்ளை
பூந்தமல்லி: சென்னை அண்ணா நகரில் உள்ள முன்னாள் நீதிபதியின் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அண்ணாநகர், ஏ.எச்.பிளாக் சாந்தி காலனி 3வது தெருவைச் சேர்ந்த ஞானப்பிரகாசம், 80, ஓய்வுபெற்ற நீதிபதி ஆவார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு பூந்தமல்லியில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் அவர் வசித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை அண்ணா நகரில் உள்ள வீட்டிற்கு அவர் வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உடனே அண்ணாநகர் காவல் துறைக்கு அவர் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த காவல்துறையினர் கொள்ளை நடந்த வீட்டை சோதனையிட்டனர். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகை, ரூ.5 லட்சம் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வரும் காவல் துறையினர் மர்ம நபர்களுக்கு வலை வீசியுள்ளனர்.

