புதுடெல்லி: தமிழ்நாட்டில் வன்னி யர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக தீர்ப்பளித்தது.
ஏற்கெனவே, இந்த இடஒதுக் கீட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டது.
"வன்னியர்களுக்கு என 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லாது.
"உள் ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தெளிவுபடுத்தவேண்டும்," என உச்ச நீதி மன்றம் தீர்ப்பின்போது கூறியது.
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்துக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மாநில அரசும் பாமகவும் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுக்களை நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய நீதி பதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
"வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது," எனக் கூறியுள்ள நீதிபதிகள், "மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள 115 சமூகங்களில் வன்னியர்களை மட்டும் தனிப் பிரிவாகக் கருத முகாந்திரம் இல்லை," என்றும் அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருத்தம் அளிப்பதாகக் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், உரிய ஆய்வுகளை மேற்கொண்டு தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் சட்டம் இயற்றவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
"உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனினும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள காரணங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்து இருப்பது மனநிறைவு அளிக்கிறது.
"இட ஒதுக்கீடு விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது," என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது. வன்னியர்களை மட்டும் தனிப் பிரிவாகக் கருதுவதற்கு எந்தவோர் அடிப்படை முகாந்திரமும் இல்லை. உள் ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய்

