டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த ஸ்டாலின்
புதுடெல்லி: டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.20,860 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் உடன் இருந்தார்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் அரசாங்கத் திட்டங்களுக்கான நிதி உட்பட சுமார் 20,860 கோடி ரூபாயை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது.
திமுக அலுவலக திறப்பு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
சென்ற வியாழக் கிழமை அன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடியைச் சந்தித்தபோது 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் ஸ்டாலின் வழங்கினார்.
குடிநீர் திட்டம் என்ற பெயரில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட முயற்சி செய்யும் கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.
பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளுக்குச் சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, அனைத்துலக கடல் எல்லையை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். கடந்த 11 ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையினரால் 3,690 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களில் 3,644 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதம் 46 தமிழக மீனவர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்திற்கு அவர்கள் கொண்டு வரப்படவில்லை.
கச்சத் தீவை மீட்டு இந்தியாவிடம் சேர்ப்பதும், அங்குள்ள பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பதும்தான் தமிழகத்தின் குறிக்கோளாக உள்ளது. எனவே கச்சத்தீவையும், மீனவர்களின் உரிமையையும் மீட்டு, இந்த மோசமான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும்.
தமிழகத்தின் நிலக்கரி பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டும். இலங்கையில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்வதற்கு இலங்கை அரசை இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஸ்டாலின் முன்வைத்து உள்ளார். 'தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுடன் நடந்த சந்திப்புகள் மிகுந்த மனநிறைவு அளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கிடையே நேற்று டெல்லி மேற்கு வினோத் நகரில் உள்ள ராஜ்கியா சர்வோதயா பால்வித்யாலயா பள்ளிக்கூடத்தை பார்வையிட வந்த மு.க ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வரவேற்று பள்ளி செயல்பாடுகளை விளக்கினார்.

