சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு மீண்டும் காமராஜர் பெயரை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அன்று விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாடார் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
்சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் என்ற பெயரும் அனைத்துலக முனையத்திற்கு அண்ணா முனையம் என்றும் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.
கடந்த 2008ஆம் ஆண்டில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றபோது பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன.
அதன் பிறகு 2013ஆம் ஆண்டில் இரு முனையங்கள் திறக்கப்பட்டாலும் பெயர்ப் பலகைகள் மீண்டும் வைக்கப்படவில்லை.
காமராஜர் முனையம் என்ற பெயர் நீக்கப்பட்டு உள்நாட்டு முனையம் என்றும் அண்ணா முனையம் என்ற பெயர் நீக்கப்பட்டு அனைத்துலக முனையம் என்றும் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரை மீண்டும் சூட்டக்கோரி, தமிழ்நாடு நாடார் சங்கம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர், சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமாரிடம் அவர்கள் தங்களுடைய கோரிக்கை மனுவை அளித்தனர்.
பின்னர் பேசிய தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் தனபாலன் ஆகியோர், "உள்நாட்டு முனையத்திற்கு மீண்டும் காமராஜர் பெயர் வைக்கக் கோரி, விமான நிலையை இயக்கு நரிடம் மனு கொடுத்தோம். விரைவில் நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம்," என்று கூறினர்.
தமிழக முதல்வராகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த காமராஜர் இந்தியா முழுவதும் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கினார். லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்கிய பெருமை காமராஜருக்கு உண்டு. தமிழகத்தில் ஏராளமான அரசுப் பள்ளிகள் திறக்கப் படுவதற்குக் காரணமாக இருந்த காமராஜரை 'கல்விக் கண் திறந்தவர்' என்று தந்தை பெரியார் மனதாரப் பாராட்டியிருந்தார். தமக்கென்று ஒரு சொத்தையும் சேர்த்துக் கொள்ள விரும்பாதவர் காமராஜர்.

