தஞ்சை: நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
சுமார் எட்டு ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு இந்தச் சிறப்பு கிடைத்துள்ளதாக இசை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும் பொருளுக்குப் புவிசார் குறியீடு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அந்தப் பொருளின் தரத்துக்கும் நன்மதிப்புக்கும் சான்றாக இந்தக் குறியீடு விளங்குகிறது.
கடந்த 17ஆம் நூற்றாண்டிலிருந்து பாரம்பரியமாக இசைக்கப்பட்டு வருகிறது தஞ்சை நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்.
ஆச்சாமரம் எனும் மரத்திலிருந்து இது பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது. நரசிங்கம்பேட்டையில் தற்போது இருபது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதைத் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே தஞ்சை வீணை, தஞ்சை ஓவியம், தஞ்சாவூர் பொம்மை, திருபுவனம் பட்டுப் புடவை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உள்ளிட்ட ஒன்பது பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், நாதஸ்வரமும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

