சென்னையில் பாலியல், போதைப்பொருள் கும்பல்களுக்கு காவல்துறை வலைவீச்சு
சென்னை: பெண்களைப் போதைப்பொருள்களுக்கு அடிமையாக்கி சீரழித்ததுடன், அவர்களைப் பாலியல் தொழிலிலும் ஈடுபட வைத்த ஆடவன் கைதாகி உள்ளான்.
பாலசுப்பிரமணியன் என்ற அந்த ஆடவருக்கு சென்னையில் போதைப்பொருள்கள் விற்கும் பல கும்பல்களுடன் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
நூற்றுக்கணக்கானோர் கைதாகும் நிலையில், சென்னையில் காவல்துறை சுற்றுக்காவல், கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.
மேலும் வாகனச்சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும் வடசென்னையில் போதை மருந்து விற்கும் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஐந்தாயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் இளையர் ஒருவரும் இரு பெண்களும் போதை மயக்கத்தில் இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் காரில் சோதனையிட்டபோது போதை மாத்திரைகளும் போதைப் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் சில பொருள்களும் கிடைத்தன.
விசாரணையில் அந்த இளையர் சென்னை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பதும் இரு பெண்களும் தென்காசி, சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவ்விரு பெண்களும் மகளிர் பிரிவு அதிகாரியால் மேலும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு, பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பாலசுப்பிரமணியன் இளம் பெண்களைக் குறிவைத்து அவர்களுக்கு இலவசமாகப் போதை மாத்திரைகளை விநியோகித்து, போதைக்கு அடிமையாக்கி உள்ளான்.
பின்னர் ஒரு கட்டத்தில் மாத்திரைகள் தருவதை அவன் நிறுத்தியதும், தவிப்புக்கு ஆளாகும் பெண்கள் அவனது பேச்சுக்குக் கட்டுப்பட்டுள்ளனர்.
அதன் பிறகு அவர்களை சீரழித்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளான் பாலசுப்பிரமணியன். இதன் மூலம் கிடைத்த பணத்தில் அவன் உல்லாசமாக வாழ்ந்துள்ளான்.
இதையடுத்து அவன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை கைது செய்துள்ளது.
பாலசுப்பிரமணியனுக்கு சென்னையில் போதை மாத்திரை விற்கும் பல்வேறு கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து, அவன் அளித்த தகவல்களை வைத்து அவர்களுக்கும் வலைவீசப்பட்டுள்ளது.
ஏராளமான பெண்கள் பாலசுப்பிரமணியனிடம் சிக்கி சீரழிந்து இருப்பது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்தப் பெண்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் போதைப்பொருள் கும்பல்களைக் கூண்டோடு பிடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

