ஓபிஎஸ்: மக்களைக் கண்ணீரில் மிதக்கவிடும் செயல்
சென்னை: தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்தி இருப்பது மக்களைக் கண்ணீரில் மிதக்கவிடும் செயல் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடப்பதாக விமர்சித்தார்.
சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பன்னீர்செல்வமும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கும் தலைமை ஏற்றனர்.
தமிழகத்தில் சொத்து வரி 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இது ஏழை, எளிய, நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
வாடகை வீட்டில் வசிப்பவர்களும் இதனால் அல்லல்பட நேரிடும் என்று தெரிவித்த அவர், திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்திருப்பதாக கூறினார்.
"பத்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சியில் மக்களை வாட்டி வதைக்காத, வரி இல்லாத வரவு செலவு அறிக்கை, வரி இல்லாத ஆட்சிதான் நடைபெற்றது.
"திமுக தேர்தலின்போது அளித்த ஐநூறுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் இதுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை," என்றார் பன்னீர்செல்வம்.
ராமநாதபுரம், வேலூர், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்வரும் 10ஆம் தேதி தொடங்கி பத்து நாள்களுக்கு தெருமுனைக் கண்டனக் கூட்டங்கள் நடைபெறும் என அமமுக அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்து வரும் 8ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
நேரு: மத்திய அரசுதான் காரணம்
சென்னை: தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்த திமுக அரசு விரும்பவில்லை என்றும் 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, வரியை உயர்த்தினால்தான் நிதி தருவோம் என்ற மத்திய அரசின் நிபந்தனையால்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
"உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரியை உயர்த்த வேண்டும். அதன்பேரில்தான் மத்திய அரசின் மானியங்கள் விடுவிக்கப்படும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையில் கூறப்பட்டிருந்தது.
"சென்னை மாநகராட்சியில் வரி உயர்த்தி 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு பிறகு தற்போதுதான் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சந்தை மதிப்பு, பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகிய காரணிகளை பரிசீலித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று அமைச்சர் கே.என். நேரு மேலும் தெரிவித்துள்ளார்.

