சென்னை: கொரோனா பேரிடருக்குப் பின்னர் தமிழகத்தில் சிறுநீரகம், கல்லீரல் செயல் இழப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்துப் பேசிய அவர், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுதும் இந்நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
"உலக அளவில் பார்க்கும்போது சிறுநீரக, கல்லீரல் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடம் இருந்து உறுப்புகளைத் தானமாகப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருத்தப்படுகின்றன. இந்த உன்னதமான சிகிச்சை முறையை வேகப்படுத்த வேண்டும்," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு ஹிதேந்திரன் என்ற 15 வயது மாணவர் விபத்தில் மரணம் அடைந்தபோது, அவரது உறுப்புகள் தானமாக பெறப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதை நினைவுகூர்ந்தார்.

