முதல்வர்: திண்டிவனம் தொழிற்சாலையில் 6,000 பேருக்கு வேலை கிடைக்கும்
சென்னை: எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாகத் திகழும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் திண்டிவனம் பகுதியில் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பேசிய அவர், பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்கும் ஆர்வத்துடன் தமிழகம் நோக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
அடிக்கல் நாட்டப்பட்ட புதிய தொழிற்சாலை மூலம் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்த வாய்ப்பை திண்டிவனம் பகுதி மக்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தத் திட்டத்தின் மூலம் 22 ஆயிரம் படித்த இளையர்களுக்கு வேலை கிடைக்கும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்ட இந்தப் பத்து மாத காலத்தில் தமிழக அரசை ஏராளமான தொழில் நிறுவனங்கள் தொடர்பு கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து துறைகளும் சம விகிதத்தில் வளர வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்றார்.
"தமிழகத்தில் வெளிப்படையான அரசு நிர்வாகம் நடந்து வருகிறது. எனவே தென்மாவட்டங்களிலும் தொழில் தொடங்க நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
"திமுக ஆட்சியில் அனைத்து மாவட்டங்களும் தொழில்வளர்ச்சி பெற முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதுபோன்ற திட்டங்களால் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாகத் திகழும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.