7.5% இடஒதுக்கீடு செல்லும்: உயர் நீதிமன்றம்

7.5% இடஒதுக்கீடு செல்லும்: உயர் நீதிமன்றம்

2 mins read
dfc69563-5fba-4950-bc20-47ba73705eb8
-

சென்னை: மருத்­து­வக் கல்­வி­யில் தமி­ழக அர­சுப் பள்ளி மாண­வர்­களுக்கு வழங்­கப்­படும் 7.5% இட­ஒதுக்­கீடு செல்­லும் என்று சென்னை உயர் நீதி­மன்­றம் தீர்ப்­பு வழங்கி இருக்கிறது.

மருத்­து­வப் படிப்­பில் சேர 'நீட்' தேர்வு கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் தமிழ் வழி­யில் கல்வி பயி­லும் கிரா­மப்­புற, அர­சுப் பள்ளி மாண­வர்­கள் பாதிக்­கப்­ப­டு­வர் எனக் கூறி, தமி­ழக அரசு அத்­தேர்வை எதிர்த்து வரு­கிறது.

அதற்­கே­து­வாக, 'நீட்' தேர்­வில் இ­ருந்து தமி­ழ­கத்­திற்கு விலக்கு அளிக்க வேண்­டும் என்ற மசோ­தா­வைச் சட்­ட­மன்­றத்­தில் திமுக தலை­மை­யி­லான தமி­ழக அரசு நிறை­வேற்­றி­யது. ஆயி­னும், தமி­ழக ஆளு­நர் அதற்கு இன்­னும் ஒப்­பு­தல் அளிக்­க­வில்லை.

முன்­ன­தாக, கிரா­மப்­புற மாண­வர்­க­ளின் பொரு­ளி­யல் நிலை­யைக் கருத்­தில்­கொண்டு, அதி­முக தலை­மை­யி­லான முந்­திய அரசு மருத்­து­வக் கல்­வி­யில் அர­சுப் பள்ளி மாண­வர்­க­ளுக்கு 7.5% உள்­ஒ­துக்­கீடு வழங்­கப்­படும் என்று அறி­வித்­தது.

அதனை எதிர்த்து, தனி­யார் பள்­ளி­கள் வழக்கு தொடுத்­தன. அந்த உள்­ஒ­துக்­கீட்­டில் தங்­க­ளை­யும் சேர்த்­துக்­கொள்­ளக் கோரி, அரசு உதவி பெறும் பள்­ளி­களும் நீதி­மன்­றத்தை நாடின.

இவ்­வ­ழக்­கில், "மாண­வர்­களுக்கு இட­ஒ­துக்­கீடு வழங்க மாநில அர­சுக்கு அதி­கா­ரம் உண்டு. அத­னால், அர­சுப் பள்ளி மாண­வர்­க­ளுக்கு தமி­ழக அரசு வழங்­கிய 7.5 விழுக்காடு உள்­ஒ­துக்­கீடு செல்­லும். ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இட­ஒ­துக்­கீடு குறித்து மறு­ஆய்வு செய்து முடி­வெ­டுக்க வேண்­டும்," என்று உயர் நீதி­மன்­றம் நேற்று தீர்ப்­ப­ளித்­தது.

அத்­து­டன், உள்­ஒ­துக்­கீட்­டிற்கு எதி­ரா­கத் தொட­ரப்­பட்ட வழக்­கு­கள் அனைத்­தும் தள்­ளு­படி செய்­யப்­ப­டு­வ­தாக நீதி­ப­தி­கள் அறி­வித்­தனர்.

'கல்­விச் செலவை அரசே ஏற்­கும்'

இந்­நி­லை­யில், "இது வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க தீர்ப்பு. முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யி­லான இட­ஒ­துக்­கீட்­டிற்கு உயர் நீதி­மன்­றம் அளித்­துள்ள மிகப் பெரிய அங்­கீ­கா­ரம். திமுக ஆட்­சிக்கு வந்தபின், சமூக நீதிக்­கான சட்­டப் போராட்டத்தில் கிடைத்த 3வது வெற்றி," என்று தமி­ழக முதல்­வர் சட்­ட­மன்­றத்­தில் உரை­யாற்­றி­ய­போது குறிப்­பிட்­டார். மேலும், 7.5% உள்­ஒ­துக்­கீட்­டின்­கீழ் மருத்­து­வப் படிப்­பில் சேரும் அர­சுப் பள்ளி மாண­வர்­க­ளின் கல்­விச் செலவு முழு­வ­தை­யும் அரசே ஏற்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.