சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளுக்காகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அரசு அதனை மனமுவந்து செய்யவில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
"முன்பு உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடக்கவில்லை. அதனால், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தேக்க நிலையில் இருந்தன. மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வருவாய்ப் பற்றாக்குறையால், மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பணிகளைக்கூட நிறைவேற்ற சிரமப்பட்டன. ஆனால், இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு, திட்டங்களுக்கு அரசிடம் இருந்து நிதியை எதிர்பார்ப்பார்கள். இதனால், குறைந்த, நடுத்தர வருமானப் பிரிவினரைப் பாதிக்காத வகையில், வளர்ச்சிப் பணிகளுக்காக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது," என்று மன்றத்தில் நேற்று முன்தினம் முதல்வர் விளக்கமளித்தார்.

