சென்னை: இலங்கையில் பொருளியல் நெருக்கடி காரணமாக பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும் தமிழர்களுக்கு உதவிப் பொருள்களை அனுப்ப அனுமதிக்கும்படி தொலைபேசி மூலம் இந்திய வெளியுறவு அமைச்சரை தமிழக முதல்வர் வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
அரிசி, கோதுமை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் கிழக்கு, வடக்கு மாநிலங்களுக்கும் கொழும்பு, யாழ்ப்பாணத்திற்கும் தோட்டத் தமிழர்களுக்கும் அனுப்ப தமிழக அரசு ஆயத்தமாக இருக் கிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் மூலம் அந்தப் பொருள்களை விநியோகிக்க அனுமதிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கி வருகிறது. இந்தச் சம்பவம் திரும்பத் திரும்ப நடக்கிறது.
இது கவலை தருகிறது. இதைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்று அண்மையில் பிரதமர் மோடியிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறிய ஸ்டாலின், வெளியுறவு அமைச்சரையும் இதன் தொடர்பில் உதவும்படி கேட்டுக்கொண்டார்.
இலங்கை பிடித்துவைத்து இருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளைப் பத்திரமாக விடுவிக்க வேண்டிய தேவை இருப்பதையும் மத்திய தலைவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதன் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி கூறிய தாகவும் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.