சேலம்: இன்று முதல் கொங்கு மண்டலத்தில் சசிகலா (படம்) சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்று பல்வேறு வாசகங்களுடன் கூடிய பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
'தியாகத்தாயே, அதிசயமே, பலர் வெளிச்சத்திற்கு வர காரணமாக இருந்த தியாகச்சுடரே, தலைவியே' என்று சசிகலாவைப் புகழ்ந்துரைக்கும் சுவரொட்டிகளில் அதிமுக நிர்வாகிகள் சிலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக கலைவாணி என்பவரின் பெயரில் ஏராளமான சுவரொட்டிகளைக் காண முடிகிறது.
சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் முன்பு அதிமுக கோட்டையாகக் கருதப்பட்டது. எனினும், அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு கொங்கு மாவட்டங்களில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை.
இந்நிலையில், கொங்கு மண்டலத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்றுள்ள சசிகலா, அங்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அதிமுக தலைமைக்கு, குறிப்பாக பழனிசாமி தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சசிகலா இன்று சேலம் மாவட்டத்துக்கு வருகை தர இருப்பதாகவும் அவருக்கு முன்னாள் எம்எல்ஏ தனியரசு தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் அடங்கிய அணியை உருவாக்க சசிகலா முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சசிகலாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை உடனடியாக கட்சியில் இருந்து களையெடுக்க பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது.
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சசிகலா தொடுத்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என 2017ல் நடந்த கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடுத்தார்.

