சென்னை: தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
எனினும் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பூஸ்டர் ஊசி போடப்படுவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. ஒரு பூஸ்டர் தடுப்பூசியின் விலை ரூ.225 ஆகும்.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய விவரம், கோவின் இணையத்தளத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சு ஏற்கெனவே வெளியிட்ட வழிகாட்டுதல்களை தனியார் தடுப்பூசி மையங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மருந்தின் விலைக்கு மேலாக ரூ.150 வரை சேவைக் கட்டணமாக வசூலித்துக்கொள்ளலாம் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதிய உருமாறிய கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எனவே இதுகுறித்து பரவி வரும் தகவல்களால் பொதுமக்கள் பீதி அடையவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தவறான தகவல்கள் வெளியாகி வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக, மும்பையில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது.

