செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8b5bbd8f-63f1-4f55-8dd4-e80893cfd228
-

அமைச்சர்: மீனவர்கள் அனைவருக்கும் செயற்கைக்கோள் தொலைபேசி

புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கை கடற்பகுதிக்குள் செல்வதில்லை என்றும் கடலில் எல்லைகள் சரிவர தெரிவதில்லை என்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுக்கவும் பாதுகாப்பாக மீன் பிடிக்கவும் உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். "தமிழகத்தில் உள்ள மீனவர்கள் அனைவருக்கும் செயற்கைக்கோள் தொலைபேசி விரைவில் வழங்கப்படும்," என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு அனுமதிச்சீட்டு பெறுவதில் தள்ளுமுள்ளு: காவல்துறை தடியடி

மதுரை: திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் பகுதியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கான அனுமதிச்சீட்டு (டோக்கன்) பெறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தினர். நேற்று முன்தினம் காளை உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் ஒரே சமயத்தில் அனுமதிச்சீட்டு பெறுவதற்குக் குவிந்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மோதல் பெரிதாகாமல் இருக்க காவலர்கள் தடியடி நடத்தினர். சிறிது நேரத்துக்குப் பிறகு அனுமதிச்சீட்டுகள் மீண்டும் விநியோகிக்கப்பட்டன.

மேலும் 21 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வருகை

ராமேசுவரம்: இலங்கையில் பொருளியல் நிலைமை மேலும் மோசமடைந்து வரும் நிலையில், அங்கிருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடி கடற்பகுதிக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். அவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.இலங்கையில் நாள்தோறும் போராட்டங்களும் அரசாங்க எதிர்ப்புப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்குள்ள தமிழர்கள் தமிழகம் வர விரும்புகின்றனர். அந்த வகையில் விசா இல்லாமலும் உரிய அனுமதியின்றியும் படகுகள் மூலம் தனுஷ்கோடி வந்தடைந்த அகதிகளின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.

திரைப்படங்களில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு வாசகம்

சென்னை: கொரோனா நெருக்கடிக்குப் பிறகு திரையுலகமும் மீண்டு வருவது தமக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் கஞ்சா, குட்கா (போதைப்பாக்கு) உள்ளிட்ட போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பேசியபோது அவர் கேட்டுக்கொண்டார். "ஊடகம், பொழுதுபோக்குத் துறையின் முக்கிய உலகளாவிய மையமாகத் திகழத் தேவையான அனைத்தும் தென்னிந்தியாவில் இருக்கிறது. திரைப்படங்கள் தொடங்கும்போது புகை, மதுப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்கள் காண்பிக்கப்படுவது பாராட்டுக்குரியது. அதேபோல் போதைப்பொருள்கள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களையும் வெளியிட வேண்டும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.