நாகை: கிறிஸ்துவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறையொட்டி நேற்று வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் திரளாகப் பங்கேற்றனர்.
இந்தப் பவனியில் பங்கேற்றவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி ஓசன்னா பாடல்களைப் பாடினர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்திய வாரம் குருத்தோலை ஞாயிறாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஏராளமானோர் நேற்று காலை திரளாகக் கூடினர்.
வேளாங்கண்ணியில் இந்தக் குருத்தோலை பவனி முக்கிய தெருக்களின் வழியே சென்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.
நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. ஏப்ரல் 17ஆம் தேதி கிறிஸ்துவர்களால் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

