சிவகங்கை: கீழடி அகழாய்வின்போது அகரம் பகுதியில் ஒரே குழியில் இருந்து மூன்று பானைகள் கண்டெடுக்கப்பட்டன.
தமிழகத் தொல்லியல் துறையினர் சிவகங்கை மாவட்டம் கீழடியில் முகாமிட்டு தொடர் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது எட்டாம்கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.
இதில், அகரம் பகுதியில் அண்மையில் தோண்டப்பட்ட குழியில் இருந்து மூன்று பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் மூன்று குழிகள், அகரம், கொந்தகை ஆகிய தளங்களில் தலா ஒரு குழி என மொத்தம் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடப்பதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
கொந்தகையில் தோண்டப்பட்டுள்ள குழியில் இருந்து இதுவரை 12 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கிடையே, கீழடியில் பானை ஓடுகள், சதுர வடிவிலான செங்கற்கள் உட்பட ஏராளமான பொருள்கள் கிடைத்துள்ளன. அதனால் இங்கு அகழாய்வுப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. மிக விரைவில் இப்பொருள்கள் அனைத்தும் அருங்காட்சியகம் ஒன்று நிறுவப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் வரலாற்றுத்துறை பேராசிரியரும் மாவில்பட்டி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது எட்டு அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்ட தூணில் நான்கு பக்கங்களிலும் ஐந்து அடுக்குகளைக் கொண்ட சிறிய அளவிலான புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய ஓர் அடுக்குநிலை நடுகல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த அடுக்குநிலை நடுகல்லானது கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விஜயநகர பேரரசின் கர்நாடக பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கள ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

