செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9e59a2f2-76c1-4022-a904-321369e84d26
-

இரிடியம் மோசடி: மூவர் கைது

ராணிப்பேட்டை: தமிழகத்தில் இரிடியம் இருப்பதாகக் கூறி, அலுமினிய குண்டானைக் காட்டி ஏமாற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜாபிர். இவரை நண்பர் மூலம் அணுகிய உலகநாதன் என்பவர் தம்மிடம் சக்திவாய்ந்த இரிடியம் இருப்பதாகக் கூறி, வேறொரு நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு அலுமினிய குண்டானைக் காண்பித்து அதைத் தொட்டுப் பார்க்குமாறு கூற, ஜாபிரும் அவ்வாறே செய்துள்ளார். அப்போது அவருக்கு மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்துள்ளது. உடனடியாக ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து அந்த குண்டானை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார் உலகநாதன். ஜாபிர் தன்னிடம் பணம் இல்லை என்று கூற, பிறகு ஏன் குண்டானைத் தொட்டாய் என்று சொல்லி உலகநாதன் உள்ளிட்ட மூவர் ஜாபிரைத் தாக்கியுள்ளனர். இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளிக்க, விசாரணையின்போது உலகநாதன் ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வாய்ப்பு

சென்னை: தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மே 7ஆம் தேதி நடப்பு திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடையும்போது உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.

சசிகலா மனு: நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். இதையடுத்து, அந்தப் பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் சசிகலா. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்றும் சசிகலாவின் மனுவை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.