சென்னை: பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையத் தளத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அந்த இணையத் தளத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆங்கிலத்தில் மட்டுமே விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இது அதிர்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் பல்வேறு படங்களுடன் வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. எனினும், முன்பு இருந்ததைப் போல் தெளிவான வடிவமைப்பு இல்லை என்றும் மாற்றி அமைக்கப்பட்ட இணையத்தளத்தில் தகவல்களைத் தேடுவது கடினமாக உள்ளது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
அனைத்துக்கும் மேலாக, பல்கலை இணையத்தளத்தில் அனைத்து பக்கங்களிலும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. எந்த இடத்திலும் தமிழ் மொழியைக் காண முடியவில்லை என்றும், இதை அறவே ஏற்க இயலாது என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்ற வேண்டிய அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் மொழியைப் புறக்கணித்திருப்பது வேதனைக்குரியது என்று அவர்கள் கூறுகின்றனர்.

