சென்னை: தமிழ்ப் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழ்தான் இந்தியாவிற்கு இணைப்பு மொழி என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்திதான் இணைப்பு மொழியாகக் கருதப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், ஏ.ஆர். ரகுமான் பொதுவெளியில் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்றிருந்தபோது சீனர் ஒருவர் தம்மிடம் பேசியதாகவும் அப்போது, வட இந்தியர்கள் நிறமாக இருப்பதாகவும் அவர்களின் படங்களை விரும்பிப் பார்ப்பதாகவும் அந்தச் சீனர் தம்மிடம் கூறியதாகவும் ரகுமான் குறிப்பிட்டார்.
அதைக் கேட்டு தாம் மிகவும் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அந்தச் சீனர் தென்னிந்திய மொழிப் படங்களைப் பார்த்தாரா எனும் கேள்வி தமக்குள் எழுந்ததாக தெரிவித்தார்.
"நம் தமிழ்ப் படங்களைப் போன்றுதான் மலையாளப் படங்களும் மற்ற மொழிப் படங்களும் உள்ளன. இந்தியாவில் எங்கிருந்தாலும் அது இந்தியாதான். இதில் வட இந்தியா, தென்னிந்தியா என்று எதுவும் இல்லை.
"தென்னிந்தியப் படங்களில் கறுப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த, வலிமையான கதாபாத்திரங்களைக் கொடுங்கள். நம் எல்லோருக்கும் நம் நிறம்தான் பிடிக்கும்," என்று ரகுமான் மேலும் தெரிவித்தார்.

