சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டி உள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண கச்சத்தீவை 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு இந்தியாவுக்கு குத்தகை அடிப்படையில் தர வேண்டும் என்றும் இதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம் மீனவர்கள் பல்வேறு இடர்பாடுகளை தொடர்ந்து சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தங்கச்சிமடம், ராமேசுவரம் மீனவர்களின் படகுகள் சேதமடைவது வாடிக்கையாகி உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இலங்கைக்கு ரூ. 250 கோடியை இந்தியா கொடுத்துள்ளது என்றும் மேலும் ரூ. 22,500 கோடி தேவை என இலங்கை கேட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"இலங்கையில் 140 கோடி டாலர்களை சீனா முதலீடு செய்துள்ளது. இதற்காக இலங்கை 280 ஏக்கரை 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகை அடிப்படையில் கொடுத்துள்ளது.
"கச்சத்தீவின் பரப்பளவு 255 ஏக்கர் மட்டும்தான். எனவே, 99 ஆண்டுகளுக்கு கச்சத்தீவை இந்தியாவிற்கு குத்தகைக்குத் தர இலங்கை முன்வர வேண்டும்," என்றார் ஜவாஹிருல்லா.

