கோயம்புத்தூர்: இந்தி மொழி பேசாத மாநிலங்கள் உட்பட அனைவரும் இந்தி மொழி கற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என காங்கிரஸ் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி சாட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவும் சமையல் எரிவாயு உருளை விலையைக் குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை சார்பில், கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்வைத் தொடங்கி வைத்து பேசிய அவர் இவ்வாறு சொன்னார்.
"இந்தி பேசாத மாநிலங்களும் இந்தி மொழியைப் பின்பற்ற வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு, இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
"இந்தியாவில் மொழிப்பிரச்சினை வந்தபோது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என்றார்.
"அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் இன்று இந்தியாவில் மொழிப்பிரச்சினை இல்லாமல் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானில் மொழிப்பிரச்சினை ஏற்பட்டு தான் அது பிளவுபட்டுள்ளது. இந்நிலை இந்தியாவுக்கு வரக்கூடாது.
"தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தெளிவான எச்சரிக்கையை கொடுத்துள்ளார்," என்றார்.
இதற்கிடையே, இந்தி திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

