சென்னை: இந்தி மொழித் திணிப்பை பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பிரிவு ஒருபோதும் அனுமதிக்காது என்று அதன் தலைவர் அண்ணாமலை (படம்) நேற்று தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"எந்தக் காரணத்திற்காகவும் இந்தி மொழியைத் திணிப்பதை தமிழக பாஜக அனுமதிக்காது, ஏற்றுக்கொள்ளாது என்பதை மிக தீர்க்கமாக சொல்வது எங்களது கடமை," என்றார் அவர்.
"உள்துறை அமைச்சர் அமித் ஷா, இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருந்து வருகிறது, இதற்கு பதிலாக இந்தி இருக்க வேண்டும் என்றுதான் கூறினார். திரு அமித்ஷாவோ, பிரதமர் நரேந்திர மோடியோ இந்தியைத் திணிப்பதை விரும்பவில்லை," என்றார் திரு அண்ணாமலை.
"இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்தியாவினுடைய இணைப்பு மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். நிச்சயமாக அதை வரவேற்கிறோம். அதில் தவறு எதுவும் கிடையாது. ஆனால் தமிழை இணைப்பு மொழியாக்க, அந்த இடத்தை அடைவதற்கான முயற்சியை நாம் எடுத்திருக்கிறோமா என்பதுதான் கேள்வி.
"உண்மையாகவே தமிழ் இணைப்பு மொழியாக வரவேண்டும் என்றால், தமிழக அரசு ஒவ்வொரு மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதி, அந்தந்த மாநிலத்தில் 10 பள்ளிகளில் முழுமையாக தமிழ்வழிக் கற்றலை நடத்த வகைசெய்ய வேண்டும்; அதற்கான முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தமிழக முதல்வர் கடிதம் அனுப்ப வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.
தேசியக் கல்விக் கொள்கையில் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் படிக்கவேண்டும் என உத்தரவிட்டதே பாஜக அரசுதான் என்று அண்ணாமலை நினைவூட்டினார்.

