சென்னை: நந்தனம் வட்டாரத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூபாய் 40 கோடியில் புதிய மாணவர் விடுதி கட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வனின் வேண்டுகோளை ஏற்று, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 உள்ளிட்ட முக்கிய நாள்களில் இதுவரை நடைபெற்றுவந்த சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.
"ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளைத் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்," என்று திரு ஸ்டாலின் உறுதியளித்தார். ஆதிதிராவிட நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் 123கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்துதரப்படவிருக்கின்றன.

