மதுரை: தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடித்து வரும் நிலையில், ஒரே நாளில் ஏழு பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தயங்கினர்.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக பல்வேறு மாவட்டங்களில் திடீரென கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கேரள கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அம்மாநிலத்தில் பலத்த மழை பெய்கிறது. இதன் எதிரொலியாக தமிழகத்திலும் கோடை மழை தொடங்கியுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில மணி நேரம் நீடித்த மழை காரணமாக அங்கு குளிர்ச்சி நிலவுகிறது.
திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, நாகை ஆகிய மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் மழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில், கனமழைக்கு மத்தியில் வெவ்வேறு பகுதிகளில் ஏழு பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துவிட்டனர்.
விருதுநகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் நான்கு பேர் திடீரென மின்னல் தாக்கியதில், உடல்கருகி பலியாகினர்.
இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த நிறைமதி கிராம ஏரியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஜெயக்கொடி மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மேய்த்துக் கொண்டிருந்த நான்கு ஆடுகளும் மின்னல் தாக்கி பலியாகின.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அவருடன் இருந்த 23 வயது இளையர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசுப் பணியிடத் தேர்வுக்காக மரத்தின் நிழலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த இரு இளையர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருடன் இருந்த மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்தாருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

