புத்தாண்டு அன்று மாளிகை செல்லாமல் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பைக் காட்டின
சென்னை: தமிழ்நாட்டில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் விரிசல் அகலமாகி வருவதைப் போல் தெரிகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி மாநில ஆளுநர் ரவி அளித்த விருந்தை தமிழக அரசு நிராகரித்து விட்டது.
ஆளுநர் மாளிகையில் நடந்த அந்த விருந்தில் முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரும் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை.
இது பற்றி கருத்து கூறிய திமுக வட்டாரம் "மதியாதார் வாயிலை மிதிக்க வேண்டாம் என்று நாங்கள் விருந்தைப் புறக்கணித்துவிட்டோம்," எனக் கூறியது.
அந்த விருந்து நிகழ்ச்சியையொட்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்க்கவிஞர் பாரதியாரின் சிலை திறப்பு விழாவும் நடக்கவிருந்தது.
விருந்தில் அதிமுக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் மட்டுமே கலந்துகொண்டன.
மாநிலத்தின் ஆளுநர் அரசாங்கத்தை மதிப்பதே இல்லை. தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக அவர் செயல்பட்டு வருகிறார் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குறைகூறி வருகின்றன.
நீட் எனப்படும் மருத்துவ தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறும் தீர்மானத்தை தமிழக சட்டமன்றம் இரண்டு முறை நிறைவேற்றி அதிபரின் அங்கீகாரம் பெறுவதற்காக அதை ஆளுநரிடம் அனுப்பிவைத்தது.
ஆனால் அந்தத் தீர்மானங் களையும் தமிழக அரசின் இதர தீர்மானங்களையும் அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்காமலேயே ஆளுநர் இருந்து வருகிறார் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது.
அந்தத் தீர்மானங்களை அதிபரிடம் அனுப்பி வைக்கும்படி நேரடியாக ஆளுநரை சந்தித்து அமைச்சர்கள் கேட்டதாகவும் ஆனால் அதற்கும் ஆளுநர் அசைந்துகொடுக்கவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை உடனடியாக அதிபரிடம் அனுப்பிவைத்து உதவும்படி ஆளுநருக்கு முதல்வர் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
"அரசும் ஆளுநரும் அரசமைப்புச் சட்ட கடமைகளை ஆக்ககரமான முறையில் நிறைவேற்றி வந்தால் மாநிலம் தொடர்ந்து செழிப்படையும், முன்னேற்றம் அடையும். அரசுக்கும் ஆளுநருக்கும் இடைப்பட்ட உறவு மனமுவந்ததாக தொடர்ந்து இருந்து வரும், இதன் மூலம் தமிழக மக்களின் நலன்கள் தலைசிறந்த முறையில் காக்கப்படும் என்று நம்புகிறேன்," என தனது கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டார்.
புத்தாண்டு அன்று பல்வேறு திட்டங்களை காணொளி மூலம் முதல்வர் தொடங்கிவைத்தார்.

