மீன்பிடி தடைக்காலம் அமல்
தூத்துக்குடி: கடல் வளம், மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் கிழக்குக் கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நடப்பில் இருக்கும். அந்தக் காலத்தில் மீன்கள் இனப்பெருக்கம் நடக்கும். தமிழகத்தில் தடையை ஒட்டி 10,000 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
மண்ணைத் தின்று தப்பிய மாது
சென்னையில் போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவரும் அவருடைய சகோதரரும் சொத்து பிரச்சினை காரணமாக ஞானஜோதி, 62, என்ற தங்கள் தாயாரை தஞ்சையில் இருட்டு வீட்டில் பல மாதமாக அடைத்து வைத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
சாப்பிட எதுவும் கொடுக்கப்படாததால் அந்த மாதுக்கு மனநிலைப் பாதிக்கப்பட்டு மண்ணை நோண்டி தின்று உயிர்வாழ்ந்ததாகவும் தெரியவந்து உள்ளது. ஆட்சியரின் உத்தரவின்பேரில் அந்த மாது மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இப்போது முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இதன் தொடர்பில் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். படம்: தமிழக ஊடகம்
1,583 புதிய உயிர்வாயு படுக்கைகள்
சென்னை: தமிழ்நாட்டில் உயிர்வாயு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை படுக்கை வளம் அதிகரித்துள்ளது.
மொத்தம் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், 18 மாவட்ட தலைமையக மருத்துவமனைகள், 139 பஞ்சாயத்து நிலை மருத்துவமனைகள் ஆகியவற்றில் ரூ. 266.73 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள 1,583 உயிர்வாயு சிகிச்சை படுக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை மாநிலத்திற்கு அர்ப்பணித்தார்.
நச்சுவாயு தாக்கி மூவர் மரணம்
சென்னை: சென்னையை அடுத்த ஆவடி அருகே திரு முல்லைவாயிலில் உள்ள தன் வீட்டில் இருக்கும் 10 அடி ஆழமுள்ள குடிநீர் தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய பிரேம்குமார் என்பவர் நச்சுவாயு தாக்கி மயங்கி விழுந்தார். அவரைக் காப்பாற்ற தொட்டிக்குள் இறங் கிய இதர இருவரும் மாண்டதாக அதிகாரிகள் கூறினர்.

