மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா இன்று காலை 5.30 மணி முதல் 6.20 மணிக்குள் நடக்கிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விழாவில் பக்தர்கள் நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை.
இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றில் இறங்கி கள்ளழ கரைத் தரிசனம் செய்ய பக்தர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துவிட்டது.
ஆகையால், பக்தர்கள் ஆற்றில் இறங்கி சுவாமியைத் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்தார். கரையோரங்களில் இருந்தபடி சாமி கும்பிடும்படி மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
மதுரையில் சித்ராபௌர்ணமியை ஒட்டி 12 நாள்கள் நடக்கும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். சித்திரைத் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடந்தது. விழாவின் மற்றொரு முக்கிய அம்சமான தேரோட்டம் நேற்று நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்துச் சென்றனர். திருவிழாவைக் காண மதுரை, சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்திருப்பதால் மதுரை எங்கும் மக்கள் வெள்ளம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவித்தன.
வைகை ஒருபுறம் இருக்க, கனமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், குற்றால அருவி உள்ளிட்ட பல இடங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பதும் தெரியவருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததாக நேற்று ஊடகத் தகவல்கள் தெரி வித்தன.

