சென்னை: பிரதமர் மோடி, அம்பேத்கர் குறித்து தாம் தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெறப் போவதில்லை என இசையமைப்பாளர் இளையராஜா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தாம் கூறியதை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு புத்தகத்துக்கான முன்னுரையில் மோடி, அம்பேத்கர் இருவரையும் ஒப்பிட்டு இளையராஜா சில கருத்துகளை குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் பிரதமர் மோடியைப் பாராட்டும் விதமாக தெரிவித்த கருத்துகளுக்கு ஒரு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், உண்மையைப் பேசுவதற்குத் தாம் என்றுமே தயங்கியது இல்லை என இளையராஜா தம்மிடம் தெரிவித்ததாக அவரது இளைய சகோதரர் கங்கை அமரன் தமிழக ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களுக்காக தாம் அமைக்கும் மெட்டுகள் பிடிக்கவில்லை என்று சொன்னால் அவற்றையும் தாம் திரும்பப் பெற்றதில்லை என்றும், மனதில் உள்ளவற்றைப் பேசத் தாம் தயங்கியதில்லை என்றும் இளையராஜா கூறியதாக கங்கை அமரன் குறிப்பிட்டுள்ளார்.
"மற்றவர்களுடைய கருத்து வேறு மாதிரியாக இருக்கலாம். இது என்னுடைய கருத்து. மற்றவர்கள் கருத்து எனக்கு பிடிக்காவிட்டாலும், அது பிடிக்கவில்லை என்று நான் சொல்ல மாட்டேன்.
"நான் கூறியதை அரசியலாக்க விரும்பவில்லை. மோடிக்கு வாக்களியுங்கள் என்று சொல்ல மாட்டேன். அதேபோல், வாக்களிக்காதீர்கள் என்றும் சொல்ல மாட்டேன்," என்று இளையராஜா தம்மிடம் திட்டவட்டமாகக் கூறியதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 'என்றும் ராஜா இளையராஜா' என்ற காணொளியை வெளியிட்டுள்ளது தமிழக பாஜக.
அதில், சர்ச்சைக்கு வித்திட்ட 'அம்பேத்கரும், மோடியும்' புத்தகத்தில் இளையராஜா எழுதியுள்ள முன்னுரையில் உள்ள சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 'அம்பேத்கர், மோடி, இளையராஜா ஆகிய மூவரும் அடித்தட்டில் இருந்து வந்து உச்சம் தொட்டவர்கள்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"உண்மையை பேசத் தயங்கும் தமிழகத்தில், மனதில் பட்ட உண்மையை உள்ளபடியே சொன்ன இசைஞானி என்றும் ராஜா இளையராஜா," என்ற வரிகளும் காணொளியின் முடிவில் இடம்பெற்றுள்ளது.
இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழக பாஜகவினர் இந்தக் காணொளிகளைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். இதேபோல் இளையராஜாவின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட பிற கட்சிப் பிரமுகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
'எனது கருத்துகளை திரும்பப் பெற மாட்டேன்; அவற்றை அரசியலாக்க வேண்டாம்'

