சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி கடந்த ஆறு மாதங்களில் மட்டும் நூறாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனால், தமிழகத்தில் வேளாண் தொழில் செய்வோர் எண்ணிக்கை 22.80 லட்சமாக உயர்ந்துள்ளது என்று நேற்று முன்தினம் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வின்போது அவர் குறிப்பிட்டார்.
"ஒரு லட்சம் இலவச இணைப்பு காரணமாக ஒரு லட்சம் விவசாயிகளின் குடும்பங்கள் மட்டுமல்ல, அவர்களது வேளாண் உற்பத்தியால் தமிழகம் அடையும் வளர்ச்சி என்ன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். "1990 வரை விவசாயிகள், வேளாண்மைக்காக பயன்படுத்தும் மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்தி வந்தார்கள்.
"ஒவ்வொரு உழவரிடமிருந்து 10 குதிரைத்திறன்வரை உள்ள மின் மோட்டார்களுக்கு குதிரைத்திறன் ஒன்றிற்கு 50 ரூபாய் வீதமும், 10 குதிரைத் திறனுக்கு மேல் உள்ள மின் மோட்டார்களுக்கு ஒரு குதிரைத் திறனுக்கு 75 ரூபாய் வீதமும் ஆண்டுதோறும் கணக்கிட்டு வசூலிக்கப்பட்டு வந்தது.
"அதன் பின்னர் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் அனைத்து உழவர்களுக்கும் இலவச மின்சாரம் என்று அறிவித்தார்.
"அதன்படி கடந்த திமுக ஆட்சியில் 2010-2011 காலகட்டத்தில் அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 77,158 வேளாண் மின் இணைப்புகள் உழவர்களுக்கு வழங்கப்பட்டன," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 2011 முதல் 2021 வரை உழவர்களுக்கு வழங்கப்பட்ட வேளாண் மின் இணைப்புகள் 2,21,579 மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

