செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
89551aa0-996d-43e1-84ca-fba999a1e2c4
-

இலவச பூஸ்டர் ஊசி போட மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்து

கோவை: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா பூஸ்டர் ஊசி போட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் ஊசி போடப்படுவது அவசியம் என்றும் பூஸ்டர் ஊசியை இலவசமாக வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அசுரர்கள், களையெடுப்பு எனப் பேசி பரபரப்பைக் கிளப்பிய அண்ணாமலை

குமரி: தமிழகத்தில் திமுக ஆட்சியும் கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியும் விரைவில் அகற்றப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதன் பிறகு இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமையும் என்று குமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார். "நாம் தயார் நிலையில் இருக்கும்போது ஆண்டவன் கட்டளையிடுவான். அப்போது அசுரர்கள் களையெடுப்பு நடக்கும். அந்த நேரத்தில் கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அகற்றப்படும். அதன் பின்னர் தமிழகத்தில் திமுக ஆட்சியும் அகற்றப்பட்டு நம் ஆட்சி அமையும்," என்றார் அண்ணாமலை. அசுரர்கள், ஆட்சி களையெடுப்பு என்று அவர் பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் வர முயன்ற இலங்கைத் தமிழர்கள் ஐந்து பேர் கைது

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தமிழகத்துக்குப் படகு மூலம் வர இருந்த ஐந்து பேரை தலைமன்னார் காவல்துறை கைது செய்துள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேளையில் இரண்டு பெண்கள், ஒரு குழந்தை உட்பட அந்த ஐந்து பேரும் தலைமன்னார் கடற்கரையில் படகுக்காகக் காத்திருந்தபோது, சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கண்ணில் பட்டனர். விசாரணைக்குப் பின்னர் ஐந்து பேரும் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

100 டிகிரியை கடந்து வாட்டும் வெயில்

திருச்சி: தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை மேகங்கள் வலம் வந்தாலும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் கடுமையாக உள்ளது. இந்நிலையில், திருச்சி, கரூர், வேலூரில் நேற்று முன்தினம் 101 டிகிரி வெயில் சுட்டெரித்தது. திருவண்ணாமலையிலும் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரையிலும் வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவனிப்பாரற்ற புராதன சின்னங்கள்

தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள கணேசபுரம் விருமானூத்து மலைப்பகுதியில் ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுவதாகவும் அங்கு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். "மிகப்பழமையான சின்னங்கள் குறித்து இப்பகுதி மக்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. மலைப்பகுதியில் அத்திமரத்தின் வேர் பகுதியில் இருந்து வரும் சுனைநீர் எந்தக் காலத்திலும் வற்றுவதில்லை. சுனை அருகே அமைந்த கோவில்கள் எந்தக் காலத்தில் உருவானவை எனத் தெரியவில்லை. ஆனால் நிறைய கல்வெட்டுகள் உள்ளன," என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.