கோவை: நாடு முழுவதும் நூறு விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், கோவை விமான நிலையத்தை 809 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் திட்டம் துரிதப்படுத்தப்படுகிறது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், கோவை விமான ஓடுதளம் விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும் அடுத்த முப்பது ஆண்டுகால தேவையைக் கவனத்தில் கொண்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இதையடுத்து விமான நிலைய வடிவமைப்பு, பொறியியல் ஆலோசகரை நியமிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த விமான நிலைய விரிவாக்கத் திட்டம் மீண்டும் வேகம் பிடித்திருப்பதால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தைப் பொறுத்தவரை அங்கு தற்போது 9,760 அடி ஓடுபாதை மட்டுமே உள்ளது. அதை 12 ஆயிரம் அடி நீளம் கொண்டதாக நீட்டிக்க வேண்டியுள்ளது. அதற்கு 627 ஏக்கர் நிலம் தேவை.
புதிய ஓடுபாதை அமைக்கப்பட்டால்தான் அங்கிருந்து வெளிநாட்டு விமானங்களை அதிக எண்ணிக்கையில் இயக்க முடியும். மேலும், ஆகப்பெரிய சரக்கு விமானங்களும் வந்து செல்ல முடியும்.
விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1,132 கோடியை ஒதுக்கி உள்ளது. தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவதில் மாநில அரசி நடவடிக்கைதான் முக்கியம் என்பதால், தமிழக அரசு தற்போது துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு இந்த நிதி ஒதுக்கீடு பயன்படும்.
அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு உலகத்தரத்துடன் கோவை விமான நிலையம் செயல்படுவதற்கு ஏற்ப மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன.
மற்ற அனைத்துலக விமான நிலையங்களைப் போன்று, விமான, வாகன நிறுத்துமிடங்கள், பெரிய ஓடுபாதை, தொழில்நுட்ப, தீயணைப்பு வளாகங்கள், விமான கட்டுப்பாட்டுப் பிரிவு, வணிக வளாகம், உணவகங்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கான தங்கும் வசதிகள், பயணிகளுக்கான ஓய்வறைகள் என அனைத்து நவீன வசதிகளும் கோவை விமான நிலையத்தில் காணப்படும். அடுத்த 32 மாதங்களில் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

