சென்னை: போலிச்சான்றிதழ் கொடுத்து மத்திய அரசுப் பணியில் சேர்ந்த 300 வடமாநிலத்தவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு உடனடியாக தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இந்த முறைகேட்டில் தொடர்புடைய அனைவருக்கும் சட்டப்படி உரிய தண்டனை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தி உள்ளார்.
வட மாநிலத்தவர்கள் செய்துள்ள இந்த முறைகேடு கடும் அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், முறைகேடான வழிகளில் தமிழர்களது வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பறித்துவரும் வடமாநிலத்தவர்களின் மேலாதிக்கத்தை திராவிட அரசுகள் தடுக்கத்தவறிவிட்டதாகச் சாடி உள்ளார்.
"இத்தகைய முறைகேடுகளை கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் திராவிட அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
"மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரகண்ட், மிசோரம், சிக்கிம், மணிப்பூர், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தனிச்சட்டமே இயற்றியுள்ளன," என்று சீமான் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், தனியார் துறைகளில் 80% அளவுக்கு மண்ணின் மைந்தர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க வேண்டுமென்று கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகள் சட்டமியற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், திமுக அரசு இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
"தமிழர்களது பணிவாய்ப்புகள் பறிபோவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பணியிடங்களில் 80% தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என்று நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
"இதன் மூலம் மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் ஒருகோடி தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும்," என்று சீமான் தமது அறிக்கையில் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

