திருநெல்வேலி: நெல்லை அருகே நிலத்தகராறு காரணமாக இரு உறவினர்கள் குடும்பத்துக்குள் ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உள்பட மூவர் படுகொலை செய்யப்பட்டனர்.
சண்டையைத் தடுக்கச் சென்ற இருவர் மீது சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்ததை அடுத்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி அழகர்சாமி, அவருடைய மனைவி பேச்சியம்மாள், செந்தூர்குமார், உறவினர் ராஜ லட்சுமி ஆகிய நால்வரைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பியோடிய சுந்தரபாண்டி, ராஜ மணிகண்டன் ஆகிய குற்றவாளிகளைப் பிடிக்க டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொலைச் சம்பவம் காரணமாக பதற்றம் நிலவுவதை அடுத்து, நாஞ்சான்குளம் பகுதியிலும் பாளை யங்கோட்டை அரசு மருத்துவமனை யிலும் ஏராளமான காவல்துறை யினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள நாஞ்சான்குளத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ், 60. இவரது சித்தப்பா மகன் அழகர்சாமி, 50, மானூர் ஒன்றிய பாஜக நிர்வாகி.
இவர்களது குடும்பச் சொத்தான இரண்டு ஏக்கர் நிலத்தை பங்கீடு செய்வது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ஜேசுராஜ் தரப்பினர் ஆழ்துளைக் கிணறு தோண்டியதால் பிரச்சினை வெடித்துள்ளது.
இதற்கு அழகர்சாமி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அழகர்சாமியின் மகன்கள் சுந்தரபாண்டி, ராஜமணிகண்டன் உள்ளிட்டோர் ஜேசுராஜ் குடும்பத்தினரை அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் ஜேசுராஜ், அவரது தம்பி மரியராஜ், 55, தங்கை வசந்தா, 46, ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ் குமார் செய்தி யாளர்களிடம் பேசியபோது, "நாஞ்சான்குளம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நிலத்தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று தனிப்படையினர் தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். அவர்களும் விைரவில் கைதாவார் கள்," என்று கூறினார்.

