சூலுார்: சின்ன வெங்காயத்தின் கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதை அடுத்து, "கடன் வாங்கி சாகுபடி செய்துள்ளோம். விலை வீழ்ச்சியால் நஷ்டத்தை சந்தித்து வரும் எங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிவாரணம் வழங்கவேண்டும்," என வெங்காய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள் கூறுகையில், "இங்குள்ள மலைப்பாளையம், ஜே.கிருஷ்ணாபுரம், அய்யம்பாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை உள்ளிட்ட கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காய சாகுபடி நடக்கிறது. ஏக்கருக்கு சின்ன வெங்காயம் நடவு செய்ய ரூ.50,000 முதல் ரூ.60,000 ஆயிரம் வரை செலவாகிறது.
"கடந்த வாரத்தில், அதிகபட்சமாக ஒரு கிேலா சின்ன வெங்காயம் ரூ.10 முதல் ரூ.12 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.20 முதல் ரூ.25 வரை கொள்முதல் செய்தால் மட்டுமே எங்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யவும் ஏற்றுமதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எங்களின் வாழ்வாதாரம் மேம்படும்," என்று கூறியுள்ளனர்.

