சென்னை: யாராலும் திருட முடியாத சொத்து ஒன்று உண்டு என்றால் அது கல்விமட்டும்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரும்பக் கிடைக்காத மகிழ்ச்சியான காலம் பள்ளிப்பருவம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறு கட்டமைப்பு செய்வதற்கான பணிகளைச் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்துப் பேசினார்.
"பள்ளிக் கல்விக்கு மிகமிக முக்கியத்துவத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது.
"அரசுப் பள்ளிகளை முழுமையாக மேம்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மைக் குழுக்களை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
''பள்ளிகளில் படிக்கக்கூடிய குழந்தைகளின் பெற்றோர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் போன்றோர் இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம்பெறுவார்கள்.
"ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தன்னிறைவு பெற்றுள்ள பள்ளியாக மாறவேண்டும். பள்ளியின் தேவையறிந்து அவற்றை வழங்க வேண்டும். குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
"இவற்றைச் செயல்படுத்துவதற்காகத்தான் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
"படிப்பை கைவிடுவதை தவிர்த்தல், படிப்பைக் கைவிட்ட குழந்தைகளை அவர்களது வயதுக்கேற்ற வகுப்பில் மீண்டும் பள்ளியில் சேர்த்தல், பள்ளியின் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளில் புதிய மேலாண்மைக் குழுவினர் ஆக்கபூர்வமாகச் செயலாற்ற வேண்டும்.
"அனைத்து வகை வன்முறை களில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்கள் ஒருவருடன் ஒருவர் அன்புடன் பழகும் சூழலை உருவாக்கவேண்டும்.
"இவை அனைத்தையும் செயல்படுத்துவதற்காகத்தான் குழு அமைக்கப்பட்டுள்ளது.
"மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய மூவருடைய சிந்தனையும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தால்தான் கல்வி நீரோடை மிகச் சீராகச் செல்ல முடியும். அதில் எவர் ஒருவர் தடங்கல் செய்தாலும் கல்விப் பயணம் தடைப்பட்டுவிடும்.
"குழந்தைகளின் கல்வி என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம். அவர்களுக்கு அளிக்கப்படும் தரமான கல்விதான் சமுதாய முன்னேற்றத்தின் திறவுகோல்," என்று உரையாற்றினார் முதல்வர்.
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது ஏழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். திருட முடியாத ஒரு சொத்து என்றால் அது கல்வி மட்டும்தான். உங்கள் குழந்தைகள் என்னவாக விரும்புகிறார்களோ அதற்குத் தடை போடாமல் நிறைவேற்ற பெற்றோர் வழிகாட்டுங்கள். உங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்

