நடிகர் சூரி 110 கேள்விகளுக்கு பதில்
சென்னை: பண மோசடி புகார் தொடர்பாக திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரி மூன்றாவது முறையாக சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்பு முன்னிலையாகி 110 கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீதும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீதும் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டதாக அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சூரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அதனை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், ஆறு மாத காலத்துக்குள் வழக்கை முடிக்கவும் உத்தர விட்டது. இந்நிலையில், சூரியிடம் 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றதாகத் தெரிகிறது.
கால்நடைகளுக்கு உணவாகும் கேரட்: விவசாயிகள் வேதனை
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 2,200 ஹெக்டேரில் கேரட் பயிரிடப்படுகிறது. இந்த கேரட் விற்பனையை நம்பி இம் மாவட்டத்தில் 50,000 பேர் இருக்கின்றனர். இந்நிலையில், அறுவடை செய்த கேரட் பயிரை சந்தைக்குக் கொண்டு செல்வதற்கான செலவுத் தொகை கூட கிடைக்காததால் கால்நடைகளுக்கு உணவாக அவற்றை சாலை ஓரங்களில் விவசாயிகள் கொட்டிச் செல்கின்றனர்.
"கடந்த சில நாள்களாக கேரட் கிலோ ரூ.60க்கு விற்பனையாகி வந்த நிலையில், இப்போது ரூ.25 முதல் ரூ.45க்கு விற்பனையாகிறது. இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது," என கேரட் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கரடிகளைப் பிடிக்க கோரிக்கை
உதகை: நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள தலைகுந்தா பகவான் கோவில் கதவை உடைத்து அதிகாலை 3 மணி அளவில் உள்ளே புகுந்த கரடிகள் அங்கிருந்த நெய், எண்ணெய், தேன், வாழைப்பழம், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களைச் சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற மக்கள், தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கரடிகளைக் கூண்டு வைத்து பிடிக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும்
ஊடகங்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு
சென்னை: தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு விருதுடன் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். பேரவையில் பேசிய அமைச்சர், அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். கல்லூரிகளில் தமிழ்மன்றங்கள் அமைத்து மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். தமிழில் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் போட்டிகள் நடத்த ரூ.16 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னை: சென்னையில் பொறுப்பற்ற முறையில் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டும் நின்றுகொண்டும் பயணம் செய்யும் மாணவர்கள் மீது வரும் காலங்களில் வழக்குப் பதியப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் பள்ளி மாணவர்கள் 111 பேர், கல்லூரி மாணவர்கள் 43 பேர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளனர்.

