தூத்துக்குடி: தூத்துக்குடியில் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளை அடிக்கப்பட்ட எட்டு கிலோ தங்க, வெள்ளி நகைகள் மீட்கப்பட்டன.
கொள்ளைச் சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்தில் நால்வர் கொண்ட கும்பலை கைது செய்த காவல்துறையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டாக்டர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.
தூத்துக்குடி பிரயன்ட் நகரைச் சோ்ந்தவா் முருகன். இவர், சிதம்பரநகர் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற முருகன், மறுநாள் காலை கடையைத் திறந்தபோது, உள்ளே இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்துள்ளன.
கடையின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு தங்கம், வெள்ளி நகைகளைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றிருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, தென்பாகம் காவல் நிலையத்துக்கு அவா் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். தடயவியல் நிபு ணா்களும் தடயங்களைச் சேகரித்த னா்.
அப்போது, கடையின் பின்பகுதி யில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் உள்ள சூலாயுதத்தை எடுத்து வந்து சுவரில் துளையிட்டு வெள்ளி, தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
பின்னர், கடையிலும் அந்தப் பகுதியிலும் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களிலும் பதிவான காட்சிகளின்படி கொள்ளையர்களைப் பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி லோகியாநகரைச் சோ்ந்த முனியசாமி, 24, பிரயன்ட் நகரைச் சேர்ந்த சதீஷ், 20, லெவிஞ்சிபுரம் சுடலையாண்டி, 29, பதினேழு வயது சிறுவன் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.