காவல்துறை கண்காணிப்பு
அலுவலகத்திற்கு எதிரே கொலை
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்திற்கு எதிரே உள்ள வணிக வளாகத்திலுள்ள கடை ஒன்றின் முன்பு நேற்று காலை இளையர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இளையர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு வழிப்போக்கர்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
கொலை செய்யப்பட்ட அந்த இளையர் மதுரை கே.புதூர் பாண்டியன் நகரை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ஆனந்த் (வயது 26) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி'யில் பதிவானவற்றை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகக்
கறுப்புக் கொடி; பாஜக கண்டனம்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வரும்போது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி தமிழக டிஜிபி-க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர், "அதிர்ஷ்டவசமாக ஆளுநர், அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களோ, கொடிகளோ மற்ற எந்த பொருட்களாலோ பாதிக்கப்படாமல் காவல்துறையினரால் பாதுகாக்கப்பட்டது," என குறிப்பிட்டுள்ளார். இதனை நேற்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
'நவீன பரிசோதனை மையம்' ஆக
மாறிய 'அம்மா பரிசோதனை மையம்'
சென்னை: ஓமந்தூரார் தோட்டம் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது 'அம்மா முழு உடல் பரிசோதனை மையத் திட்டம்'. அது இப்போது 'அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கருவில் இருக்கும் குழந்தையின் உடல் நலத்தை ஆய்வு செய்யும் அதிநவீன பரிசோதனைக் கருவி திட்டத்தின் மூலமாக இணைக்கப்பட்டது. எனவே, 'அம்மா முழு உடல் பரிசோதனை மையம்' என்றிருந்த திட்டத்தின் பெயர் 'அதிநவீன உடல் பரிசோதனைத் திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு நிபந்தனை பிணை
ராசிபுரம்: அரசாங்கத்தில் சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.76 லட்சம் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கும் அவரது கணவருக்கும் ராசிபுரம் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு சரோஜா வெற்றி பெற்றார். இதையடுத்து ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
பழுதாகி நின்ற லாரி மீது பேருந்து மோதி 2 பேர் பலி; பலர் படுகாயம்
அருப்புக்கோட்டை: தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னைக்குப் புறப்பட்டது. அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென லாரியின் டயர் பழுதானது, சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த ஓட்டுநர் சித்தையன் (64), அதை ஒக்கீடு செய்து கொண்டிருந்தார். அப்போது திசையன்விளையில் இருந்து 36 பயணிகளுடன் சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பஸ், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் இருவர் பலியாகினர். 13 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறை அதிகாரி மீது
வாகனம் ஏற்றி கொல்ல முயற்சி
சூலூர்: புகையிலைப் பொருட்கள் கடத்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர் மீது கொள்கலன் கனரக வாகனத்தை ஏற்றி கொல்ல முயன்ற
ஓட்டுநரை காவல்துறையினர் இரண்டு கி.மீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்று கைதுசெய்தனர். தென்னம்பாளையம் அருகே சந்தேகப்படும்படி ஒரு கொள்கலன் வாகனம் வந்தது. அதனை நிறுத்துமாறு காவல்துறை ஆய்வாளர் மாதையன் சைகை காட்டினார். ஆனால், அவர் மீது ஏற்றுவதுபோல் வேகமாக வந்த வாகனம், நிற்காமல் சென்றது. அதனையடுத்து அதிகாரிகள் விரட்டிச்சென்று அந்த லாரியைப் பிடித்தனர். விசாரணையில், லாரி ஓட்டுநர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

